சென்னை: கடை ஊழியர் ஒருவரது முன்கோபம் அவரை இப்போது கம்பி எண்ண வைத்துள்ளது. சென்னையில் பஜ்ஜி சுவையாக இல்லை என்று கூறிய வாடிக்கை யாளர் ஒருவரை பஜ்ஜி கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களி டையே அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஞானமணி என்பவர் செளகார்பேட்டையில் உள்ள மின்சாதனக் கடையில் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பஜ்ஜி கடையின் நீண்ட நாள் வாடிக்கையாளர் ஆவார்.
இந்நிலையில் அடிக்கடி கடைக்கு வந்து போகும் பழக்கத்தில் வழக்கமான ருசியில் பஜ்ஜி இல்லை என்று ஞானமணி கடைக்காரரிடம் புகார் கூறியுள்ளார்.
இதனால் கடையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர் அருண் என்பவருக்கும் ஞான மணிக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.
ஒருகட்டத்தில் இந்த வாக்கு வாதம் முற்றியதன் காரணமாக அருண் தன் கையில் வைத்திருந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் ஞானமணியைக் குத்தியுள்ளார்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஞானமணி மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்டார்.