சென்னை: தமிழ்நாட்டில் அரசாங்க அலுவலகங்களில் தங்கள் வேலைகளைச் செய்து முடிக்க ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக 62 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
‘டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் இது தெரியவந்து இருக்கிறது. இந்த ஆய்வு இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்களுடைய பணிகளை முடிக்கவேண்டி இருந்தது என்று 62 விழுக்காட்டினர் தெரிவித்தனர். இந்த அளவு சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 52 விழுக்காடாக இருந்தது.
அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து வேலைகளை முடித்ததாக தேசிய அளவில் 50 விழுக்காட்டினர் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுப்போரின் எண்ணிக்கை தேசிய அளவைவிட அதிகமாக இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
ராஜஸ்தான், பீகார், உத்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிக லஞ்ச ஊழல் சம்பவங்கள் இடம்பெறுவதாக குடிமக்கள் தெரிவித்தனர்.
டெல்லி, ஹரியானா, குஜராத், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா ஆகிய இடங்களில் லஞ்ச லாவண்யம் அவ்வளவாக இல்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சொத்து மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களுக்குத்தான் அரசு அதிகாரிகளுக்கு அதிகமாக லஞ்சத்தைக் கொடுத்து வேலையை முடிக்க வேண்டி இருக்கிறது என்று தெரிகிறது.
பெரும்பாலான நிலம் மற்றும் கட்டட பதிவு நடைமுறைகள் எல்லாம் இணையம் மூலம் நடக்கின்றன என்றாலும் அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட லஞ்ச அளவில் 41 விழுக்காடு இத்தகைய காரியங்களுக்கே போய் இருக்கிறது.
இதில் மாநகராட்சிகள் 19 விழுக்காட்டு லஞ்சத்துடன் அடுத்த இடத்தில் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் போலிசும் இதர துறைகளும் உள்ளன.
தமிழ்நாட்டில் 5,700 பேருக்கும் அதிக மக்களை உள்ளடக்கி மாநில அளவில் ஆய்வு நடத்தப்பட்டது.
லஞ்சம் கொடுத்ததாகக் கூறிய 62 விழுக்காட்டினரில் 35 விழுக்காட்டினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் பல முறை லஞ்சம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தனர். 27 விழுக்காட்டினர் ஒன்று அல்லது இரண்டு முறை நேரடியாக அல்லது மறைமுகமாக லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டனர்.