மதுரை: எனது மகனுக்காக மற்றொருவர் தேர்வு எழுதினார் என்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார் தந்தை ஒருவர். இப்படி கூட நடக்குமா? என்று கேட்கும் வகையில் இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் கமல்ஹாசனுக்காக கிரேசி மோகன் தேர்வு எழுதி, கமல்ஹாசன் மருத்துவராக உதவி செய்வார். அதுபோல் இப்போது மாணவர்கள் பலரும் தங்கள் நண்பர்களுக்காக அல்லது பெரும் பணத்துக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வருகின்றனர்.
மக்களின் உயிரோடு விளை யாடும் இந்த போலி மருத்துவர்களை அடியோடு கிள்ளி எரியும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் பலரை போலிசார் கைது செய்துள்ள னர்.
இந்த விவகாரம் தொடர்பில் சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவருடைய மகன் ரிஷிகாந்த் ஆகிய இருவரும் தங்களுக்கு முன் பிணை கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
ஏற்கெனவே ரிஷிகாந்த்தின் விரல் ரேகையும் தேர்வு மையத்தில் பதிவாகி இருந்த விரல் ரேகையும் வேறுபட்டு இருப்பதை தடய அறி வியல் சோதனை முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ரிஷிகாந்தின் தந்தை ரவிக்குமார் சிபிசிஐடி போலிசாரின் முன்பு முன்னிலையாகி, “எனது மகன் ரிஷிகாந்த் நீட் தேர்வை எழுதவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒருவர் எழுதினார் என்பதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்,” என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் ராபின்சன் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பெற்றோர் தங்களின் கனவுகளை நனவாக்கும்பொருட்டு பிள்ளைகளைத் தவறான நடவடிக்கைகளுக்கு உட்படுத்துகின்றனர். இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதியாகிறது.
“எனவே இவர்களில் யாரேனும் ஒருவர் சிறையில் இருக்கவேண்டும். வரும் செவ்வாய் அன்று சிபிசிஐடி போலிசில் சரண் அடைவதாகவும் 60 நாட்கள் வரை பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என்றும் மாணவரின் தந்தை ரவிக்குமார் ஒப்புதல் அளித்துள்ளார்.
“எனவே அவரது மகன் ரிஷி காந்துக்கு முன்பிணை வழங்கப்படுகிறது. அவர் 7 நாட்களுக்கு தினந்தோறும் சிபிசிஐடி போலிசில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும். வரும் 3ஆம் தேதி வரை ரவிக்குமாரை கைது செய்ய விதித்த இடைக்காலத் தடை நீட்டிக்கப்படுகிறது,” என்று நீதிபதி உத்தரவிட்டார்.