கோவை: கோவையில் ஆதரவற்ற காப்பகத்தை சேர்ந்த மூதாட்டிகள் ஒன்றாக இணைந்து காலையிலும் மாலையிலும் சத்தான உணவைத் தயாரித்து அதை பசியோடு வரும் மாணவர்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.
கோவை - ஆர்எஸ் புரம் பகுதியில் இயங்கும் ‘ஈர நெஞ்சம்’ என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இந்த மூதாட்டிகள், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரங்களில் உணவு, சிற்றுண்டி தயாரித்து வழங்குகிறார்கள்.
உறவினர்கள் யாரும் இல்லாமல் வாழும் தங்களுக்கு பேரக்குழந்தைகளுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி மூதாட்டிகள் மகிழ்கின்றனர்.
காலையில் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவற்றையும் மாலையில் தேநீர், காபி, பிஸ்கட், பயிறு வகைகள், தானிய வகைகளையும் தயாரித்து அதை நேரில் கொண்டு வந்து பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுக்கி றார்கள்.
பசியோடு பள்ளிக்கு வரும் தங்களுக்கு காலையிலும் மாலையிலும் நல்ல உணவு கிடைப்பது பேருதவியாக உள்ளது என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
“வயிறு நிறைந்தால்தான் படிப்பில் கவனம் செலுத்தமுடியும் என மூதாட்டிகள் செய்யும் இந்த சேவைக்கு மாணவர்கள் அவர்கள் பாதம் தொட்டு மரியாதை அளித்தனர். மூதாட்டிகளின் சமூக சேவைக்கு பாராட்டுகள் குவிகின்றன.