சென்னை: நடிகர் ராதாரவி திராவிட கட்சிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார்.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை இரண்டிலும் நடித்து வரும் ராதாரவி அரசியலிலும் ஈடுபாடு உள்ளவர்.
கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளராக சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ராதாரவி.
அவரது பதவி காலம் முடிந்ததும் சிறிது காலம் அதிமுகவில் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ‘கொலையுதிர் காலம்’ திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது.
அப்போது பேசிய அவர், “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி ‘மீ டு’ விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது,” என பேசினார். இந்தக் கருத்துக்கு திரைப்படத் துறையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து திமுகவில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
அதனால் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார் ராதாரவி. அதிமுகவில் தனக்கு மரியாதை உள்ளது என்று அப்போது அவர் கூறினார். தற்போது புதிய திருப்பமாக நேற்று அவர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவுக்குத் தாவினார்.
சென்னை வந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் நேற்று காலை அவர் பாஜகவில் இணைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் ராதாரவி, “பாஜகவில் பிரதமர் மோடியின் தலைமை என்னை ஈர்த்துவிட்டது. அவருக்குக்கீழ் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பாடுபடுவேன்,” என்று கூறினார்.