சென்னை: தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிழக்கு திசையில் காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்களில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை எழும்பூர், கிண்டி, வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் மழை விடாமல் பெய்தது.
அதன் காரணமாக சென்னை, நாகை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யவாய்ப்பு உண்டு. நேற்று கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, மழை தொடரும் நிலை உள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் உள்ள சில மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.