சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர் சிலை அருகே கல்யாண மண்டபம் உள்ளது. இதனை விரிவுபடுத்தும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
மண்டபத்தில் நேற்று முன்தினம் உணவு பரிமாறும் கூடத்தை சீரமைப்பு செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் நடந்து வந்தன.
அப்போது அதிக அதிர்வு ஏற்பட்டது. இதனை ஜேசிபி ஓட்டுநர் பொருட்படுத்தவில்லை. அதனால் திடீரென மண்டபத்தின் 30 அடி சுவர் இடிந்து வெளிப்புறமாக சரிந்தது.
அதன் காரணமாக, பக்கத்து தெருவில் நடந்து சென்ற 6 பேர் மீது சுவர் சரிந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஈஸ்வரி (வயது 65), ஜீவா (30), கன்னியம்மாள் (55), நாகம்மாள் (70), அங்கம்மாள் (73), சண்முகம் (73) ஆகிய 6 பேர் மீட்கப்பட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே கன்னியம்மாள் இறந்தார். மற்ற ஐவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜேசிபி ஓட்டுநரிடம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.