சென்னை: தமிழக அரசு, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒன்பது புரிந்துணர்வு குறிப்புகளில் கையெழுத்திட்டு உள்ளது.
சீனாவின் பிஒய்டி, ஐடிசி பேப்பர்போர்டு, மிட்சுபா சிக்கால் உள்ளிட்ட அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மொத்தம் ரூ. 5,027 கோடி முதலீடு செய்யப்போவதாக அந்த உடன்பாடுகள் மூலம் உறுதி தெரிவித்து இருக்கின்றன.
புதிய உடன்பாடுகள் இடம்பெறவிருப்பதால் மாநிலத்தில் 20,351 புதிய வேலைகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் ஏற்பாட்டில் சென்னை கிண்டியில் தனியார் விடுதி ஒன்றில் சனிக்கிழமை நடந்த முதலீடு மற்றும் தேர்ச்சி மேம்பாட்டு மாநாட்டில் புரிந்துணர்வு குறிப்புகள் கையெழுத்தாயின.
தமிழக முதல்வர் பழனிசாமி, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். கடந்த 10 மாதங்களில் ரூ. 19,000 கோடி முதலீட்டுடன் கூடிய 63 புதிய திட்டங்கள் மாநிலத்தில் இடம்பெறுமாறு செய்து தமிழக அரசு சாதனை நிகழ்த்தி இருக்கிறது என்றார் முதல்வர்.
ஜனவரி மாதம் நடந்த இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிக முதலீடு மாநிலத்துக்குக் கிடைக்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதன் தொடர்பில் அந்த மாநாட்டில் கை யெழுத்தான உடன்பாடுகளில் 53 உடன்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளதாகவும் இதர 219 உடன்பாடுகள் பல்வேறு கட்டங்களில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
அண்மையில் முதல்வர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது அங்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களையும் பழனிசாமி நேற்றுத் தொடங்கி வைத்தார்.
இதனிடையே, நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தேர்ச்சிகளை அடையாளம் காணுவதற்காக புதிய செயல்திட்டம் தொடங்கப்படுவதாகவும் பழனிசாமி அறிவித்தார்.
நிறுவனங்களின் குறைகளைத் தீர்க்க உதவும் ‘தொழில் நண்பன்’ (BIZ BUDDY) என்ற இணையத்தளத்தையும் நேற்றைய நிகழ்ச்சியில் தொடங்கிவைத்த முதல்வர் பழனி சாமி, இந்தத் திட்டங்கள் பெரும் பலன்களை உருவாக்கும் என்றார்.