திருச்சி: ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவதன் தொடர்பில், கேரளாவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திருச்சி, தஞ்சையில் மூன்று இடங்களில் சனிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு செல்ல இருந்த ஒருவர் உட்பட மூன்று பேர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்பவரின் மகன் சர்புதீன், 21, அவரது மைத்துனரும் அதே பகுதியில் வசிப்பவருமான அப்துல் சமது என்பவரின் மகன் அப்துல் ஜப்பார், 24, என்ற இரண்டு பேரும் விசாரிக்கப்படுவோரில் அடங்குவர்.
இவர்களில் அப்துல் ஜப்பார் நேற்று குவைத் செல்ல இருந்தது தெரியவந்ததையடுத்து அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரையும் அளுந்தூரில் சர்புதீன் நடத்தும் கணினி நிலையத்துக்கு அழைத்துச் சென்று, மாலை 5 மணி வரை அங்கும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கேரள மாநிலம் கொச்சியிலுள்ள என்ஐஏ மண்டல தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவரையும் அதிகாரிகள் விடுவித்தனர். 2 மடிக்கணினிகள், 5 கைபேசிகள், கணினித் தகவல் சேமிப்புச் சாதனம், வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
இதேபோல, தஞ்சாவூர் ஆட்டு மந்தைத் தெருவைச் சேர்ந்த காலணி விற்பனையகம் நடத்திவரும் ஷேக் அலாவுதீன், 55, என்பவரின் வீட்டிலும் கடையிலும் சோதனை நடத்திய அதிகாரிகள், அவரிடம் இருந்த ஒரு மடிக்கணினி, கைபேசி, குறிப்பேடு ஆகியவற்றை எல்லாம் கைப்பற்றினர்.
ஷேக் அலாவுதீனை கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், ஞாயிறு மாலை வரை அவரிடம் அங்கு விசாரணை நடத்தினர்.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடனான தொடர்பு குறித்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.