சென்னை: சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஒப்படைப்பது தொடர்பில் காவல்துறை அதிகாரி பொன். மாணிக்கவேல், தமிழக அரசு இடையேயான மோதல் வலுத்து வருகிறது.
இந்த வழக்குகளை விசாரிப்பதில் தமிழக அரசுத் தரப்பில்இருந்து தமக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என பொன். மாணிக்கவேல் ஏற்கெனவே புகார் எழுப்பியிருந்தார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்புப் புலனாய்வு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை உயர் நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
முன்னதாக சிலைக் கடத்தல் வழக்குகள் பல நிலுவையில் இருப்பதால் தமக்குப் பதவி நீட்டிப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு அளித்துள்ளார். அம்மனு மீதான விசாரணை இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் பணிக்காலம் முடிந்துவிட்டதால் வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் பொன். மாணிக்கவேல் உடனடியாக சிலைக் கடத்தல் பிரிவின் கூடுதல் டிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொன். மாணிக்கவேல் இதற்கு உடன்பட மறுத்துள்ளார்.
தம்மைச் சிறப்புப் புலனாய்வு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்ததாகவும், அதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும் அவர் அரசுக்கு அளித்துள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சட்டத்தின் அடிப்படையில் நிலையான முறையான நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை தாம் விசாரித்த சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை என்றும் பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.