புதுடெல்லி: திருச்சி உட்பட ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசுக்கு விமான நிலைய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தள்ளார்.
அமிர்தசரஸ், புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர், வாரணாசி ஆகியவை இதர ஐந்து விமான நிலையங்களாகும்.
ஏற்கெனவே லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், மங்களூரு, கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளைத் தனியார் வசம் ஒப்படைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்தப் பரிந்துரையை ஆணையம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அந்த அதிகாரி, “செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர் சபை கூட்டத்தில் திருச்சி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், இந்தூர், ராய்ப்பூர், வாரணாசி ஆகிய ஆறு விமான நிலையங்களையும் தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டது. இது பற்றி மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது,” என்றார். இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை இந்திய விமான நிலைய ஆணையம் பராமரித்து வருகிறது.