பல கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் என்பது வேடிக்கை - ஸ்டாலின்

புதுச்சேரி: பல கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்து உள்ளதாக மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளும் கட்சியான அதிமுக எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டு வந்தது. தோல்விப் பயத்தின் காரணமாகவே அவர்கள் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்தி வந்தனர்.  உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் வேறு வழியின்றி கடமைக்குத் தேர்தல் நடத்த அதிமுக முன்வந்தது. 

நீதிமன்றம் அறிவுறுத்திய காரணத்தினால் வேறு வழியில்லாமல் வேண்டுமென்றே திட்டமிட்டு யாராவது தடை பெறவேண்டும்.  நீதிமன்றமும் அந்த உத்தரவை வழங்கிடும் என்ற நம்பிக்கையில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்கக்கூடிய மாநிலத் தேர்தல் ஆணையம் ஒன்று சேர்ந்து இந்தத் தேதியை  அறிவித்திருக்கிறார்கள்.

திமுக மட்டுமல்ல, பல்வேறு கட்சியின் தலைவர்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் தேர்தல் முறையாக நடக்க, வார்டு வரையறை முறையாக செய்யப்படவில்லை.  எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு என இட ஒதுக்கீடு முறையாக நிறைவேறவில்லை.  அதையெல்லாம் முறைப்படுத்திட வேண்டும் என்றுதான் நீதிமன்றத்திற்குச் சென்றோமே தவிர, தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக நாங்கள் செல்லவில்லை. 

ஆனால், வேண்டுமென்றே எடப்பாடிப் பழனிசாமி முதல், அமைச்சர்கள் வரை திமுகதான் தேர்தலை நிறுத்தத் திட்டமிடுகிறது என்ற பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.  மாவட்டங்கள் பிரிக்கப்பட்டிருக்கிற நேரத்தில் வரையறை எந்த நிலையில் இருக்கிறது என்ற விளக்கத்தைத் தொடர்ந்து நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு இதுவரை எந்தப் பதிலும் அரசு தரப்பில் இருந்து   வரவில்லை. 

பலமுறை தேர்தல் ஆணையத்தைச் சந்தித்துத் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழிக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேரடியாகச் சென்று பல்வேறு  மனுக்களைத் தந்திருக்கிறார்கள்.  முறையாக விளக்கம் வராத காரணத்தால்  நாங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறோம்.