தருமபுர ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் இயற்கை எய்தினார்

இந்தியாவின் பழமையான சைவ மடங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீன மடத்தின் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இன்று (டிசம்பர் 4) பிற்பகல் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 97.

வயது மூப்பு காரணமாக 26 வது குருமகா சன்னிதானம் ஓய்வில் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தஞ்சாவூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியதாகக் கூறப்பட்டது.

அவருக்கு ஆதீன மடத்தின் நடைமுறைகளின்படி இறுதிச்சடங்குகள் நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கௌரவ பேராசிரியராகவும்  பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்று  49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் எண்ணற்ற சைவ இலக்கியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு பல கருத்தரங்குகளை நடத்தி தமிழுக்கு பெருந்தொண்டாற்றி வந்ததும், தமிழ் தொண்டே இறைத்தொண்டு என்று செயலாற்றியதில் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் பங்கு அதிகம்.

மயிலாடுதுறையில் அமைந்திருக்கும் இம்மடத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 27 சிவாலயங்கள் இருக்கின்றன.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity