தமிழாராய்ச்சி நிலையத்தில் இந்தி: தலைவர்கள் கண்டனம்

தமிழாராய்ச்சி நிலையத்தில் இந்தி: தலைவர்கள் கண்டனம்

2 mins read
c6359b4a-f413-4ad4-9127-b7f7771c125b
சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு. படம்: ஊடகம் -

சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓராண்டு இந்தி மொழிப் பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் நேற்று துவக்கி வைத்து அதற்காக ஆறு லட்ச ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதற்கு தமிழக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழிக்கான ஓராண்டுப் பயிற்சி சென்னையில் இயங்கி வரும் 'இந்தி பிரசார சபா' மூலமாக நடத்தப்பட்டு அவர்களாலேயே சான்றிதழும் வழங்கப்படும் என்ற தகவல் ஒட்டுமொத்த தமிழ் வளர்ச்சித் துறையையும் கேலிக்குரியதாக ஆக்குவதோடு மட்டுமல்லாது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

தனிநாயகம் அடிகளாரின் பெருங்கனவில் உருவாகிப் பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டு, கலைஞரால் செம்மைப்படுத்தப்பட்ட தமிழுக்கே உரிய ஓர் அமைப்புதான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகும்.

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வினை மேம்படுத்துதல்,

உலகத் தமிழறிஞர்களிடையே தொடர்புகொண்டு நிறுவனமும் தமிழறிஞர்களும் பயன்பெறும் நிலையில் தமிழ் ஆராய்ச்சியினை வளர்த்தல் போன்றவற்றை தலையாய நோக்கமாகக் கொண்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இன்னொரு முக்கிய நோக்கம் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் தமிழைக் கற்பித்தல் என்பதே ஆகும்.

ஆனால் இந்த முக்கிய நோக்கங்களை அடியோடு சிதைத்துவிட்டு தமிழாராய்ச்சியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்தி பிரசார சபாவோடு இணைந்து உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இந்தி கற்றுக்கொடுக்க முயல்கிறது. இது ஏற்கெனவே கொல்லைப்புறமாகவேனும் நுழையக் காத்திருக்கும் இந்தி மொழி ஆதிக்கத்திற்கு பட்டுக்கம்பளம் விரிப்பது போலானது. அத்துடன் கடைந்தெடுத்த துரோகச் செயலுமாகும் என்று தங்கம் தென்னரசு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.