சென்னை சிறார் மருத்துவமனையில் இலவச இயற்கை வைத்தியம்

சென்னை சிறார் மருத்துவமனையில் இலவச இயற்கை வைத்தியம்

1 mins read
4a98bd3c-5827-446e-b9b8-d2b36cd3a4a9
சென்னை எழும்பூர் சிறார் நல மருத்துவமனையில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மையமாக வைத்து சிறார்களுக்கு இலவசமாக இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: ஆசியாவிலேயே முதல் முறையாக சிறார் மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச்சை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலகளவில் மரபு வழியில் பின் தொடரும் ஒரு சில நோய்களை முழுமையாகத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது.

சென்னை எழும்பூர் சிறார் நல மருத்துவமனையில் யோகாவுடன் இயற்கை மருத்துவ சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பபட்டு உள்ளது.

நீர் சிகிச்சை, உடம்புப்பிடி சிகிச்சை, நீராவிக் குளியல், முதுகுத் தண்டு குளியல் உட்பட பல சிகிச்சைகள் சிறாருக்கு அளிக்கப்படுகின்றன. நாள்தோறும் 70 முதல் 90 சிறார்கள் இந்தச் சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றுச் செல்கின்றனர்.

சிறார்கள் மட்டுமின்றி பெற்றோரின் மன அழுத்தம், மனச் சோர்வைக் குறைக்க அவர்களுக்கும் யோகா பயிற்சியும் இயற்கை மருத்துவ முறையிலான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் சேவையாற்றும் டாக்டர் லதா என்ற மருத்துவர், ஆசியாவிலேயே முதன் முறையாக எழும்பூர் அரசு சிறார் நல மருத்துவமனையில்தான் சிறார்களுக்கென பிரத்தியேக யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை செயல்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தச் சிகிச்சை பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பை மையமாக வைத்து அளிக்கப்படுவதாகவும் இதற்கு நல்ல ஆதரவு கூடி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.