சுடச் சுடச் செய்திகள்

பெற்றோரைக் காப்பாற்ற புதிய அவதாரம்; மதுரையில் ஓர் ‘அவ்வை சண்முகி’

சொந்த ஊர் மானாமதுரை; வயது சுமார் 40. தினமும் பேருந்து மூலம் மதுரைக்கு வந்து, காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மறைவான ஓர் இடத்துக்குச் செல்கிறார். 

தாம் அணிந்து வந்த லுங்கி, சட்டையைக் களைந்துவிட்டு, சேலை, ஜாக்கெட் அணிந்து, தலையில் விக் வைத்து பெண் வேடத்தில் வெளியே வருகிறார்.

கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தும் அவர்,  மூன்று வீடுகளுக்குச் சென்று பாத்திரங்கள் தேய்ப்பது, சுத்தப்படுத்துவது என்று வேலைகளை முடித்துவிட்டு, மாலையில் மீண்டும் அதே இடத்துக்கு வந்து, தலையில் இருந்து ‘விக்’கை கழற்றிவிட்டு மீண்டும் லுங்கி, சட்டையை அணிந்துகொண்டு, தனது ஊருக்குப் புறப்படுகிறார்.

அவர் ஆணாகச் சென்று உடை மாற்றிவிட்டு, ‘பெண்ணாக’ உருமாறி வருவதை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் கண்டுபிடித்துவிட்டனர். அதன் தொடர்பில் சில புகைப்படங்களும் வெளியாகிவிட்டன.

அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது அவரது உண்மையான பெயர் ராஜா என்பது தெரியவந்தது. மேலும் தான் வேலை செய்யும் இடங்களில் தனது பெயரை ராஜாத்தி என கூறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

“மானாமதுரையில், எவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வயதான பெற்றோரைக் காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே, பெண்ணைப் போல வேடமிட்டு வேலை தேடினால் வேலை கிடைக்கும் என எண்ணினேன். 

“ஆனால், பெண் வேடமிட்டு சொந்த ஊரில் வேலை செய்தால் கேலி, கிண்டலுக்கு ஆளாகலாம் என்பதால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்து பெண் வேடமிட்டு வேலை தேடினேன்.

“என்னை பெண் என்று நினைத்து மூன்று வீடுகளில் வேலைக்குச் சேர்த்தனர். அங்கு வீட்டு வேலைகளைச் செய்து விட்டு மாலையில் மீண்டும் ஊருக்குச் சென்று விடுவேன். இதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தில்தான் எனது பெற்றோரைக் காப்பாற்றி வருகிறேன்.

“நான் வேலை பார்க்கும் இடங்களில் இதுவரை என் நடவடிக்கையில் யாரும் சந்தேகப்படவில்லை. நான் வேலை பார்த்து வந்த வீட்டினருக்கு எந்த துரோகமும் செய்யவில்லை.

“ஒருநாள் இந்த மோசடி எப்படியும் எனக்கு வேலை தரும் வீட்டினருக்குத் தெரிந்துவிடும் என்பது எனக்கு தெரியும். என் நிலையை அறிந்து அவர்கள் என்னை மீண்டும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்,” என்று ராஜா கூறியுள்ளார்.

இந்த விவகாரம் போலிசாரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. 

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon