19 ஆண்டு அனுபவமிருந்தும் திருடப்போன இடத்தில் தூங்கிய ஆடவர்

திருடப் போன இடத்தில் போதை மயக்கத்தில் தூங்கிவிட்ட நெடுநாள் திருடன் போலிசிடம் வசமாகச் சிக்கினான். 

விருதுநகரில் உள்ள ஒரு பெருமாள் கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த செந்தூர்பாண்டி என்ற ஆடவருக்கு அருகே ஒரு பாறையும் கைவிளக்கும் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்ட போலிசார், அந்த ஆடவரை எழுப்பி போலிஸ் நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரித்தனர். 

கூலி வேலை செய்து பிழைத்து வரும் தனக்குப் போதிய வருமானம் இல்லாததால் கடந்த 19 ஆண்டுகளாக வீடுகள், கடைகள், சிறுசிறு கோயில்களில் தான் திருடி வந்ததாக செந்தூர்பாண்டி போலிசிடம் தெரிவித்தார். 

புல்லட் பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உண்டு என்றும் அதற்குப் பணம் தேவைப்பட்டதால் பெருமாள் கோயிலில் திருடுவதற்குத் திட்டமிட்டு மதிய நேரத்தில் சென்று நோட்டமிட்டதாகவும் அவர் கூறினார். 

இரவில் திருடச் சென்றதற்கு முன்பாக மதுபானம் அருந்தியதால் போதை தலைக்கேறிவிட்டதாகவும் கோயிலிலேயே படுத்துத் தூங்கிவிட்டதாகவும் செந்தூர்பாண்டி கூறியதைக் கேட்ட போலிசார், மேல்விசாரணைக்காக அவரைத் தடுத்து வைத்து இருக்கிறார்கள்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

Loading...
Load next