முதலில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்கள் தவிர இதர 28 மாவட்டங்களுக்கு ஊரக, உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி உச்சநீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது. 

நான்கு மாவட்டங்களைப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிட்டது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது.   

இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை டிசம்பா் 6-இல் தொடங்க இருந்தது.

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பாணைக்குத் தடை விதிப்பதாகவும் புதிய அரசாணை வெளியிட்டு தேர்தலை நடத்துமாறும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. 

இதனையடுத்து மாநிலத்தின் மொத்த 37 மாவட்டங்களில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடக்கும்.

 ஊரக, உள்ளாட்சிப் பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  நேற்று தீர்ப்பளித்தது. 

தொகுதி வரையறை முடிவடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அதிமுக முதல்வர் பழனிசாமியும் திமுக தலைவர் ஸ்டாலினும் வரவேற்றனர். 

சேலம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்றும் இதில் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார். 

திமுகவுக்குத் தோல்வி பயம் காரணமாக அந்தக் கட்சி நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தீர்ப்பு பற்றி கருத்துரைத்த ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தைக் காத்திடும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் முதல்வரைப் போலவே தானும் அதை வரவேற்பதாகவும் கூறினார்.