சென்னை: தமிழகத்தில் அரசின் தொடர்பு மொழியாக தமிழை அங்கீகரிப்பதற்காக 1956 டிசம்பர் 27ஆம் தேதி தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் உருவாக்கப்பட்டது.
தமிழை ஆட்சிமொழியாக்கி சட்டம் இயற்றப்பட்டதை, இந்த மாதம் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தமிழ் ஆட்சிமொழி வாரமாகக் கொண்டாட தமிழ் வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. அந்த ஒரு வாரத்தின்போது தமிழ்நாட்டில் தமிழ் மொழியை அரசின் தொடர்பு மொழியாக்குவதன் தொடர்பில் பல நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 1956ல் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் உருவாக்கப்பட்டதை அடுத்து அந்தச் சட்டத்துக்கு 1957 ஜனவரி 19ல் ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அதே ஆண்டு ஜனவரி 23ல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இப்போது அரசுத்துறைகளில் தமிழ் ஆட்சிமொழிக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, போலிஸ் துறையில் கடிதத் தொடர்புகள் அனைத்திற்கும் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடக்காத ஒன்பது மாவட்டங்களில் தமிழ் ஆட்சிமொழி வாரக் கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.