சென்னை: நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்குத் தெலுங்கானாவில் போலிசார் எடுத்ததைப் போன்ற மரணதண்டனைதான் விதிக்கப்படும் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் அம்பேத்கர் நினைவு நாளில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தெலுங்கானாவில் நான்கு பேரை அந்த மாநில போலிஸ் சுட்டுக்கொன்ற தைத் தான் முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
மரணம் என்பது எந்த ஒரு குற்றத்துக்கும் தண்டனையாக இருக்கக் கூடாது என்ற அவர், ஆனால் பெண்களைப் போகப்பொருளாக, போதைப்பொருளாக, நுகர்பொருளாகக் கருதி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் செயலுக்கு மரணத்தைத் தவிர வேறு எதுவும் தண்டனையாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் அவ்வளவு பெரிய குற்றம் செய்தவர்கள் மீதான குண்டர் சட்டம் 90 நாட்களில் ரத்து செய்யப்பட்டது கொடுமையானது என்றும் அது வரலாற்றுப் பெரும் பிழை என்றும் சீமான் கூறினார்.
“எந்த இடத்தில் பாலியல் கொடுமை செய்தார்களோ அதே இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நால்வரைச் சுட்டால்தான் மக்களிடம் அச்சம் பரவும். இல்லை எனில் 90 நாளில் வெளியே வந்துவிடலாம். எந்த குற்றமும் செய்யலாம் என்ற சிந்தனை வந்துவிடும்.” என்று நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் கூறினார்.