வேறொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் தாலி கட்டிய இளைஞர்

வேறொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் தாலி கட்டிய இளைஞர்

2 mins read
e66026e0-75fe-4299-b703-e03255b28c30
பேருந்திலிருந்த பயணிகள் ஜெகனை சரமாரியாக அடித்து உதைத்ததுடன் அவரை போலிசில் ஒப்படைத்தனர். படங்கள்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ஜெகன்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 27 வயது ஜெகன் ஆம்பூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவந்தார்.

இரண்டு பேரும் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் படித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஜெகனின் காதலை அந்தப் பெண் ஏற்கவில்லை.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதல் கைகூடவில்லை என்று கூறப்படுகிறது.

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ரசாயன நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அந்தப் பெண், அதே நிறுவனத்தில் பணிபுரியும் வேறு ஓர் இளைஞரைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இரு வீட்டாரும் கலந்துபேசி நேற்று முன்தினம் வாணியம்பாடியில் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தினர்.

இதையறிந்து ஆத்திரமடைந்த ஜெகன் அந்தப் பெண்ணை வசமாக்கிக்கொள்ள முடிவு செய்தார்.

இன்று (டிசம்பர் 10) காலை ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் பேருந்தில் ஏறி வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார் அந்தப் பெண்.

அந்தப் பேருந்தில் ஏறிய ஜெகன், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அந்தப் பெண்ணிடம் கெஞ்சியதாகக் கூறப்படுகிறது.

தனது நிச்சயதார்த்தம், திருமணம் பற்றி அந்தப் பெண் கூறியதைக் கேட்டதும் கோபமடைந்த ஜெகன், ஏற்கெனவே மூன்று முடிச்சுப் போட்டு சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த தாலிக் கயிற்றை எடுத்து அந்தப் பெண்ணின் கழுத்தில் திடீரென போட்டுவிட்டார்.

இதை எதிர்பார்க்காத அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து தாலிக் கயிற்றைக் கழுத்திலிருந்து வெளியே எடுத்தார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஜெகன், "நீதான் என் மனைவி; இனிமேல் என்னுடன்தான் இருக்க வேண்டும்," என்று கோபத்துடன் கத்தியதாகவும் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது.

பேருந்திலிருந்த பயணிகள் ஜெகனை சரமாரியாக அடித்து உதைத்ததுடன் அவரை போலிசில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலிசார் நடவடிக்கை எடுத்தனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்