40 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்து சபரிமலைக்குச் சென்றார் நடிகர் சிம்பு

சென்னை: நடிகர் சிம்பு நாற்பது நாட்கள் விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்றுள்ளார். 

சபரி மலையிலிருந்து திரும்பியதும் அவர் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. 

நடிகர் சிம்புவின் உடல் எடை அண்மைய சில ஆண்டுகளில் அதிகமாகிவிட்டது. இதையடுத்து உடல் எடையைக் குறைப்பதற்காக அவர் சிறப்புச் சிகிச்சை மேற்கொண்டார். அதன் பலனாக அவர் உடல் இளைத்துள்ளார். 

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல மாலை போட்டுக் கொண்டார் சிம்பு. இதையடுத்து கடந்த 40 தினங்களாக அவர் விரதம் மேற்கொண்டார். 

இந்நிலையில் கடந்த திங்கட்  கிழமை மாலை அவர் சபரிமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக இருமுடி கட்டிக்கொள்ளும் முன்பு நடைபெற்ற பூசையில் அவர் கலந்து கொண்டார். அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிப் பதிவுகளும் இணையத்தில் வெளியாகி உள்ளன. 

சிம்பு ரசிகர்கள் அவற்றைப்  பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர் விரைவில் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.