சென்னை: மத்திய தொல்லியல் துறையின் அலட்சியம் காரணமாகவே கீழடி அகழாழ்வு அறிக்கைகள் தாமதமாவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அகழாய்வு அறிக்கைகள் தாமதமாவதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 3 கட்ட ஆய்வுகளின் முடிவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ள அவர், தமிழர் நாகரிகம் மிகப் பழமையானது என்பது அனைவரும் நன்கறிந்த ஒன்று என்றாலும் அதை நிரூபிக்கத் தொல்லியல் ஆதாரங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.
"அகழாழ்வு அறிக்கைகளை வெளியிட உயர் நீதிமன்றம் இருமுறை விதித்த கெடுவும் முடிந்து விட்ட நிலையில், அம்முடிவுகள் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது. 'கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி' என்று தமிழர்கள் பெருமிதப்பட்டு வந்த நிலையில், அதை உறுதி செய்வதற்கான ஆதாரமாகக் கீழடி அகழாய்வு அமைந்திருக்கிறது.
"அங்கு நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது," என ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.
கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த முதற்கட்ட ஆய்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு அரசியல் காரணங்களைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வுகளை ஏற்கெனவே திட்டமிட்டபடி அடுத்த மாதத்தில் தமிழக அரசு தொடங்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


