சிறார் பாலியல் காணொளி: ஒருவர் சிக்கினார்

திருச்சி: தமிழகத்தில் சிறார், சிறுமிகளை ஆபாசமாக சித்திரிக்கும் பாலியல் காணொளிகளைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்தோபர், 42, என்ற ஆடவரைப்போலிஸ் கைது செய்தது. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாகி இருக்கும்  இணையப் பாலியல் காணொளி விவகாரத்தில் முதலாவதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி இருக்கும் ஆசாமி இவரே என்று தெரிகிறது.

ஒரு குறிப்பிட்ட கைபேசி எண் மூலம் ‘நிலவன் நிலவன்’, ‘ஆதவன் ஆதவன்’ என்ற பெயர்களில் ஃபேஸ்புக் முகவரிகளை உருவாக்கி அவற்றின் மூலம் ஆபாசப் பதிவுகளை கிறிஸ்தோபர் பகிர்ந்து வந்தது சமூக வலைத்தள பதிவுகளைக் கண்காணித்ததன் மூலம் தெரியவந்ததாக போலிஸ் விளக்கியது. கிறிஸ்தோபரின்  கைபேசி பறிமுத லாகி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 

கிறிஸ்தோபர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் சிறார்கள் தொடர்பான பாலியல் காணொளிகள் இணையத்தில் அதிகம்  புழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று அமெரிக்கா தெரிவித்ததை அடுத்து, இந்திய அரசு அத் தகவலை தமிழக போலிசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. 

அதையடுத்து சுமார் 3,000 பேர்  விசாரிக்கப்பட உள்ளதாக தமிழக போலிஸ்  அறிவித்தது. இந்நிலையில் ஒருவர் பிடிபட்டுள்ளார்.