சுடச் சுடச் செய்திகள்

தமிழே மூத்த மொழி: நாடாளுமன்றத்தில் குரல்

புதுடெல்லி: சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் மூத்த மொழி என்று நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். 

மக்களவையில் சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் மசோதா தொடர்பான வாதத்தில் அவர்கள் பேசினர். அந்த மசோதா சமஸ்கிருத பல்கலைக்கழகங்களுக்கு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்குகிறது. 

மசோதாவை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரி தாக்கல் செய்தார். சமஸ்கிருதம் நாட்டின் தொன்மையான மொழி என்றும் அது ஓர் அறிவியல் மொழி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

ஆனால் திமுக உறுப்பினர்கள் இதை மறுத்து தமிழ்தான் தொன்மையான மொழி என்றும் எந்த மொழியும் வேறு மொழி மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்றும் குரல் கொடுத்தனர். 

திமுக உறுப்பினரான ஆ ராசா, தமிழ் 4,500 ஆண்டுக்கும் மேலான பழமைமிக்கது என்று குறிப்பிட்டார். அதேவேளையில், சமஸ்கிருதம் 2,500 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்றார் அவர். 

சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டு மற்ற மொழிகளுக்கு வெறும் ரூ.12 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாரவர். 

இடதுசாரி கட்சி உறுப்பினர்களும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தமிழுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். விவாதம் நடக்கையில் பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் மன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

இந்த மசோதா மீது பேசிய பாஜக உறுப்பினர்கள், சமஸ்கிருதம் மூலம் அறிவியல், கல்வி மேம்படும் என்று வாதிட்டனர். இது வியப்பளிப்பதாகக் குறிப்பிட்ட திமுக உறுப்பினர், அழிந்து வரும் சமஸ்கிருதத்தைத் திணிக்க மத்திய அரசு மறைமுக முயற்சி எடுப்பதையே இது காட்டுகிறது என்றார்.