சென்னை: தமிழ்நாட்டில் இணையம் மூலம் நடக்கும் லாட்டரி சீட்டு விற்பனையை முடக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
மாநிலத்தில் பல நகர்களிலும் மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் குடும்பம் லாட்டரி சீட்டு காரணமாக தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.
இதையடுத்து போலிசார் சட்டவிரோத இணைய லாட்டரியை ஒழிக்க முழு மூச்சாக களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
விழுப்புரத்தில் இணையம் வழி லாட்டரி சீட்டுகளை விற்று வந்த 14 பேர் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவிலில் நேற்று மூவர் பிடிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலும் இணையம் வழி லாட்டரி சீட்டுகளை விற்று வந்ததாகக் கூறப்பட்டதன் தொடர்பில் ஐந்து பேர் சிக்கினர்.
பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனையைத் தடுக்க தவறியதற்காக இரண்டு போலிஸ்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
விழுப்புரம் நகரில் மட்டும் இதுவரையில் இணைய லாட்டரி விற்பனை தொடர்பில் 280 புகார்கள் பதியப்பட்டு இருக்கின்றன.
ஆனால் அவற்றின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு இருக்கும் இணைய லாட்டரிகள் கேரளாவில் இருந்து இணையத்தளம் மூலம் விற்கப்படுகின்றன. அவை பதிவிறக்கம் செய்து விற்பனையாகின்றன. இத்தகைய காரியத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் எச்சரித்துள்ளது.