சென்னை: நீண்டகாலமாக நீடிக்கும் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பகல் கொள்ளையை விட கந்துவட்டி மிகவும் மோசமான குற்றம் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வரமே சாபமாக மாறுவதைப் போன்று, தமிழகத்தில் பல மாவட்டங்களில் சிறுதொழில் தொடங்குவது உள்ளிட்ட தேவைகளுக்காக பல நிறுவனங்கள் தேடி வந்து கடன் கொடுப்பதாகக் கூறியுள்ள அவர், அதன் பின்னர் கொடுத்த கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
“பணம் தேவைப்படும் பத்து பெண்களை அழைத்து, ஒரு குழுவை ஏற்படுத்தி, சில வெற்றுப் பத்திரங்களில் மட்டும் கையெழுத்து வாங்கிக் கொண்டு கடன் வழங்குகின்றனர். இதற்கு வசூலிக்கப்படும் வட்டி இமாலயத்துக்கு இணையானதாகும்,” என ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.