திருச்சி: தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தர அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியை தமிழக முதல்வர் நேரில் சந்திக்கும் போது இதுகுறித்து வலியுறுத்தப்படும் என்றார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை.
இதையடுத்து ஈழத் தமிழர்களுக்கு பாஜகவும் அதிமுகவும் துரோகம் இழைத்துவிட்டதாக தமிழக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தருவது குறித்து முதல்வர் பழனிசாமி, பிரதமருடனான சந்திப்பின் போது பேச வாய்ப்புள்ளதாக கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
“குடியுரிமைச் சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது. இதனால் ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கருத்தினை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளோம். வியாழக்கிழமை (நாளை) பிரதமரை, தமிழக முதல்வர் சந்திக்க உள்ளார். அப்போது ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து வலியுறுத்த வாய்ப்பு உள்ளது. “எந்த ஒரு சட்டமும் இயற்றப்படும்போது, சில மாறுபட்ட கருத்துகள் வருவதும், பின்னர், அச்சட்டத்தில் சில அம்சங்கள் சேர்க்கப்படுவதும் இயல்பானதுதான்,” என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.