சென்னை: எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இத்தகவலை அக்கட்சியின் பொதுச்செயலரான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தின் அடிப்படையில் அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநிலத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் தான் அமமுக மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் தனிச்சின்னம் ஒதுக்குமாறு அக்கட்சி விடுத்த கோரிக்கையை மாநிலத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.
அமமுக சார்பில் இது தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.
இதையடுத்து அக்கட்சிக்கு தனிச்சின்னம் ஒதுக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.
இதையேற்று அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநிலத் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
பொதுச் சின்னத்தில் போட்டி யிட்டால் அமமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற முடியும் என்று கூறி வந்த நிர்வாகிகள் இதனால் உற்சாகம் அடைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.