ராமேசுவரம்: தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகளை தனுஷ்கோடி போலிசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் 2 பெண்கள் உள்பட அந்த ஆறு பேரையும் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரைப் பகுதியில் போலிசார் கண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அவர்கள் அனைவரும் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 2013ஆம் ஆண்டில் அகதிகளாக தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
ஆறு பேரும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் முகவர் ஒருவர் மூலம் இலங்கை செல்ல முடிவு செய்த இவர்கள், கள்ளத்தோணி மூலம் செல்ல முயற்சித்துள்ளனர்.
தனுஷ்கோடி கடற்பகுதியில் காத்திருந்தபோது, கள்ளத்தோணி வர தாமதமானதால் ஆறு பேரும் போலிசில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அவர்களிடம் கியூ பிரிவு போலிசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறிய முகவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.