குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வலுத்துவரும் நிலையில் சென்னையிலும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், லயோலா கல்லூரி, ஐஐடி- சென்னை உள்ளிட்ட மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று போராட்டத்தில் குதித்தனர்.
மெரினா கடற்கரைக்கு அருகே உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.
“நாங்கள் குடியுரிமைச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம்,” என்று மாணவர்கள் சார்பில் பேசிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன், சுப்பையா ஆகிய இரு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றதால் மாணவர்களிடையே பதற்றம் அதிகரித்தது.
கைது செய்யப்பட்ட இரு மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இரவு ஒரு மணி வரை வைக்கப்பட்டிருந்த இரு மாணவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மாணவர்களின் போராட்டம் 3வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
இதன் காரணமாக வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கும் நியூகல்லூரி, பிரெசிடென்ஸி கல்லூரி ஆகியவற்றிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில் குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 60க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று தொடங்கியது.
அப்போது சட்ட திருத்தத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் சட்ட திருத்தத்துக்கு தற்காலிகத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொருளியல் மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட திருத்தத்தை பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை என்றார்.
“இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,” என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
புதிய குடியுரிமைச் சட்ட திருத்தம், அகதிகளாக வரும் முஸ்லிம் அல்லாத பிறருக்கு இந்திய குடியுரிமை எளிதாக வழங்க வழி செய் கிறது.