சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக உள்ள நிலையில், ஆங்காங்கே பணப்பட்டுவாடா, பிரியாணி விருந்து தொடர்பான வழக்கமான புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.
இதையடுத்துத் தேர்தல் அதிகாரிகள் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் அருகே வாக்காளர்களுக்குப் பிரியாணி விருந்துடன் பணப்பட்டுவாடாவும் நடந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு கைபேசி குறுந்தகவல், வாட்ஸ்அப் மூலம் அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர் ஒருவர் அண்மையில் வாக்காளர்களுக்குப் பிரியாணி விருந்து அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் விருந்துக்கு வந்தவர்களுக்கு வேட்பாளர் சார்பில் பணப்பட்டுவாடா நடந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்துத் தேர்தல் அதிகாரிகள் நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே ஆலை அதிபரான மற்றொரு வேட்பாளரும் பிரியாணி விருந்துடன் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, 27 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் இம்முறை 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2.06 லட்சம் பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 54,747 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 32,939 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,992 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.