சென்னை: மக்களவையின் உறுப்பினர் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தவேண்டும் என்ற முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜியின் ஆலோசனையை வரவேற்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையைப் பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது என்று அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 6ஆம் தேதி தாம் வெளியிட்ட அறிக்கையிலும் இக்கோரிக்கையைக் குறிப்பிட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“மக்களவைத் தொகுதிகளை மட்டுமின்றி சட்டப்பேரவை தொகுதிகளையும் அதிகரிக்க வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படாமல், இப்போதுள்ள விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தொகுதிகள் உயர்த்தப்பட வேண்டும்,” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வசதியாக கடந்த 2001ம் ஆண்டில் செய்யப்பட்ட 84ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.