மதுரை: எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலையும், விவசாயிகளின் வேதனைகளையும் பதிவு செய்யும் விதமாக அவர் படைத்த 'சூல்' தமிழில் சிறந்த நாவலாக சாகித்ய அகாடமியால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோவில்பட்டி அருகே உருளைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சோ.தர்மராஜ் என்ற சோ.தர்மன் இதுவரை ஈரம், தூர்வை, சோகவனம், கூகை உள்ளிட்ட 7 நாவல்களை எழுதியுள்ளார்.
இவற்றுள் 'கூகை' நாவலுக்காக ஏற்கெனவே தமிழக அரசு இவருக்கு விருது அளித்துள்ளது. "நான் நடிகர் அல்ல, எழுத்தாளன். சூரியகாந்தி போல அல்லாமல் மூலிகை போல இருப்பேன். எந்த விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். அங்கீகாரம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது மத்திய அரசிடம் இருந்தும் அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி," என்று தர்மன் தெரிவித்துள்ளார்.

