திருப்பூர்: தமிழகத்தில் பயங்கரவாத சதித்திட்டத்துடன் நால்வர் ஊடுருவி இருப்பதாகவும் அந்தக் கும்பல் இந்து அமைப்பு பிரமுகர்களைக் குறிவைத்து அவர்களைப் பின்தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கேரளாவிலிருந்து ஊடுருவி உள்ள அந்த நால்வரின் படங்களையும் இந்திய தேசிய புலனாய்வு முகவை வெளியிட்டு இருக்கிறது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் போலிசார் தீவிர வேட்டையைத் தொடங்கி இருக்கிறார்கள். அனைத்து ரயில்நிலையங்களையும் கேரளாவுக்குச் செல்லும் ரயில்களையும் அதிகாரிகள் முழுமூச்சாகக் கண்காணித்து வருகிறார்கள்.
மக்கள் கூடும் முக்கிய இடங்கள், தங்கும் விடுதிகள், வாகனங்கள் எல்லாம் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, திருச்சியில் ஏற்கெனவே சோதனை நடத்திய சர்புதீன், 21, என்ற இளைஞரின் வீட்டில் இந்த முகவையின் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். சர்புதீன் ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாத இயக்கத்துடன் தொடர்புடைய வர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கேரளாவில் இருந்து வந்த ஐந்து அதிகாரிகள் சர்புதீனின் வீட்டிற்குச் சென்று, சர்புதீன் ஏற்கெனவேதெரிவித்து உள்ள சில தகவல்கள் தொடர்பில் அவருடைய மனைவியையும் புதன்கிழமை விசாரித்த னர் என்று தகவல்கள் கூறின.
சர்புதீனின் பழைய கைபேசிகளையும் சிம்கார்டுகளையும் அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
இதனிடையே, குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு அளித்ததமிழக முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றும் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு காணப்பட்டது. மோப்ப நாய்கள் சூழ அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை முதல்வர் வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.