சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்படுவதாக ஏராளமான புகார்கள் கிளம்பி வருவதால் தேர்தல் ஆணையம் பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த நெருக்கடி ஒருபுறம் இருக்க, ஆணையத்திற்குப் புதிய தலைவலியும் ஏற்பட்டு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பலரும் ஆங்காங்கே வாக்காளர்களுக்குக் கறி விருந்து வைக்கிறார்கள் என்றும் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க அதிக அளவில் மதுபானத்தை இருப்பு வைக்கிறார்கள் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதையடுத்து தேர்தல் ஆணையம் பெரும் வேட்டையைத் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தலில் தாங்கள் போட்டியிடப்போவது உறுதி என்பதைத் தெரிந்துகொண்ட வேட்பாளர்கள் பலரும் வாக்காளர்களைக் கவர வினோதமான வழிகளைக் கையாண்டு வருகிறார்கள்.
திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வளர்மதி என்பவர் தன்னுடைய உறவினர் ஒருவருக்குச் சொந்தமான ஆலையில் 500 பேரை வரவழைத்து அவர்களுக்குப் பிரியாணி விருந்துவைத்தார்.
அதை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தி வாக்காளர்களை விரட்டிவிட்டனர்.
இவ்வேளையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கனகவள்ளி என்பவரை வெற்றி பெறச் செய்ய ரூ.110,000 மதிப்பிலான 957 மது போத்தல்களை அவருடைய கணவரான முத்துவேல் என்பவர் வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்பில், அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பலரும் கைதாகி இருக்கிறார்கள்.
இதனிடையே, மேட்டுப்பாளையம் கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிட ஜே. விசாலாட்சி என்ற 82 வயது மாது மனுச் செய்து இருக்கிறார்.
சூளகிரி அருகே ஒரே குடும்பத்தினர் இரு சாதி பிரிவுகளில் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பேருந்தைச் சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, நகராட்சித் தலைவர் பதவிக்கான இடஒதுக்கீட்டு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாக இருந்தது.