சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் நடிகை நமீதாவை (படம்) களமிறக்கினால் பாஜகவின் பக்கம் வாக்காளர்களைச் சாய்த்துவிட முடியும் என பாஜக ஆய்ந்து கூட்டிக் கழித்து கணக்கு போட்டுள்ளது. இதன் காரணமாக அவரை உடனடியாக களமிறக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
பாஜகவில் இணைவதில் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கெனவே இசை அமைப்பாளர் கங்கை அமரன், தினா, நடிகைகள் காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி, ஜெயலட்சுமி, நடிகர்கள், எஸ்.வி.சேகர், ராதாரவி ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இந்த பிரபலங்களில் பலரும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்க உள்ளனர்.
இந்நிலையில் இசை அமைப்பா ளர் பரத்வாஜும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார்.
இந்த தேர்தலில் அதிக இடங்க ளில், அதிக பதவிகளைப் பிடித்துவிடவேண்டும் என்பதே தமிழக பாஜகவின் முனைப்பாக உள்ளது.
தேர்தல் பணிக்காக பல்வேறு குழுக்களை ஏற்படுத்தியுள்ள பாஜக, சமூக வலைத்தளங்கள் வழி பிரசாரம் செய்யவும் தனி பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
சென்னையில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த தமிழக பாஜக கலைப்பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் கலைஞர்கள் பலரும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.
திரையுலகப் பிரமுகர்களின் தேதிகள் பெறப்பட்டு அவர்கள் பிரசாரம் செய்யும் இடம், தேதி ஆகிய விவரங்கள் அறிவிக்கப்படும் என மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நமீதா ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். அப்போதைய தேர்தல் பிரசாரங்களில் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் நமீதாவும் ஒருவராக இருந்தார்.