ஏடிஎம்மில் பணத்தை நிரப்ப வந்த ஓட்டுநர் ரூ.52 லட்சத்துடன் மாயம்

ஏடிஎம்மில் பணத்தை நிரப்ப வந்த ஓட்டுநர் ரூ.52 லட்சத்துடன் மாயம்

2 mins read

ஆலந்தூர்: சென்னை வேளச்சேரி யில் இயங்கும் வங்கி ஏடிஎம்மில் பணத்தை நிரப்புவதற்காக வந்த வேன் ஓட்டுநர் ஒருவர், அந்தப் பணத்தை முறையாக ஏடிஎம்மில் நிரப்பாமல் ரூ.52 லட்சம் பணத்துடன் தப்பியோடி உள்ளார். தப்பியோடிய ஓட்டுநரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியைச் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளரான அசோக் நகரைச் சேர்ந்த வினோத், 28, பணம் நிரம்பும் ஊழியரான கே.கே.நகரைச் சேர்ந்த வினோத், 26, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது, 27, ஆகியோர் காரில் லட்சக் கணக்கான பணத்துடன் வந்தனர். காரை வேளச்சேரியைச் சேர்ந்த ஓட்டுநர் அம்புரோஸ், 40, ஓட்டி வந்தார்.

தேனாம்பேட்டையில் உள்ள 5 வங்கி ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பிவிட்டு, வேளச்சேரிக்கு ரூ.87 லட்சத்துடன் வந்தனர்.

வேளச்சேரி விஜயநகரில் உள்ள விஜயா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக மேலாளர், ஊழியர், பாதுகாவலர் ஆகியோர் இற​ங்கிச் சென்றுள்ளனர். காரில் மீதம் ரூ.52 லட்சத்தை வைத்திருந்தனர்.

அப்போது எதிரே லாரி வந்ததால் காரை ஓரமாக நிறுத்துவதாக கூறி ஓட்டுநர் அம்புரோஸ் காரை எடுத்துச்சென்றார்.

போனவர் போனதுதான். திரும்பி வராமல் பணத்துடன் மாயமானார்.எங்கு தேடியும் அவரைக் காணாத தால் இதுகுறித்து போலிசாருக்கு தகவல் பறந்தது.

இந்நிலையில், பணம் நிரப்ப வந்த மற்ற மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

வேளச்சேரி முகவரியில் ஓட்டுநர் இல்லாததும் தெரியவந்துள்ளது.