சென்னை: இந்தியாவில் மத்திய அரசாங்கம் நிறைவேற்றி இருக்கும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக தலைமையில் பல அரசியல் கட்சிகள் இன்று சென்னையில் போலிஸ் தடையையும் மீறி பிரம்மாண்ட பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
புதிய குடியுரிமைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரானது என்று அவை குறிப்பிடுகின்றன. பேரணியில் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்து பின்னர் கலந்துகொள்ள இயலவில்லை என்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சித் தெரிவித்துவிட்டது.
ஆனாலும் பேரணியில் பிரம்மாண்ட அளவுக்கு மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்த்து அதிகாரிகள் சுமார் 15,000 போலிசாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.
பேரணிக்குத் தலைமை தாங்கும் திமுக அதனை பிரம்மாண்ட முறையில் நடத்திக்காட்டி டெல்லியை மிரளவைக்க வேண்டும் என நினைப்பதாகத் தெரிகிறது. பேரணியில் கலந்துகொள்ளும்படி 98 அமைப்புகளுக்கும் மேலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அந்தக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
திமுக ஆதரவு கட்சியான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல கட்சிகளும் தங்கள் சார்பில் அதிக அளவில் தொண்டர்களைத் திரட்டி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாயின.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடந்துவரும் பெரும்பாலான போராட்டங்களுக்கு போலிஸ் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல சென்னை எழும்பூரில் இன்று காலை 9 மணிக்குத் ெதாடங்கி ராஜரத்தினம் அரங்கில் முடிவடைய உள்ள அந்தப் பேரணிக்கு போலிஸ் அனுமதி தரவில்லை.
ஆனாலும் தடையை மீறப்போவதாக கட்சிகள் அறிவித்து இருக்கின்றன. தடை மறுக்கப்பட்டாலும் பேரணியை போலிசார் தடுத்து நிறுத்தமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. என்றாலும் தடையை மீறுவோர் மீது வழக்குப் பதியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரணியையொட்டி பல போக்கு வரத்து மாற்றங்களை போலிஸ் முன்கூட்டியே செய்து இருக்கிறது. இதனிடையே, வெளிநாடு செல்வதால் பேரணியில் கலந்துகொள்ள இயலவில்லை என்று குறிப்பிட்டு உள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று டுவிட்டரில் காட்டமாகத் தெரிவித்தார்.
இது போன்ற கொடுங்கோன்மை அடங்கும் வரை தனது போராட்டம் ஓயாது என்றும் குறிப்பிட்டுள்ள கமல், குடியுரிமைச் சட்டத்திற்குப் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுவதாகவும் கூறினார்.