சிவகாசி: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசியில் கொளுத்திப்போட்ட அரசியல் வெடி உள்ளூரையும் தேசியத்தையும் தாண்டி உலகம் வரை எட்டி இருக்கிறது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்த அமைச்சர், தமிழக அரசியல் பற்றியும் தேசிய தலைவர்கள் குறித்தும் அயல்நாட்டு நிலவரம் குறித்தும் கருத்துரைத்தார்.
அதிமுகவை வெல்வதற்கு இனி ஒரு கட்சி பிறந்துதான் வரவேண்டும் என்று கூறிய அவர், ஸ்டாலின் எரிகிற வீட்டில் கிடைத்த வரை பிடுங்கிக்கொள்ளும் சிந்தனைஉள்ள ஓர் அரசியல்வாதி என்று வர்ணித்தார்.
“மேற்கு வங்காள முதல்வர் மம்தா, அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறார். அவர் கையில் அதிகாரங்கள் குவிந்தால் மேற்கு வங்காளம் சுடுகாடாகிவிடும்,” என்றார் பாலாஜி.
இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஸ்டாலின், காங்கிரஸ் தலைவி சோனியா உள்ளிட்ட தலைவர்கள் மக்களிடம் பீதியைக் கிளப்பி வருவதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் இறையாண்மைக்கு எதிராக எதையும் செய்ததாகத் தெரியவில்லை என்று கூறிய பாலாஜி, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் கொடுமையானது என்று கருத்து கூறினார். மோடி என்ற வீரன் கையில் உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.