தென்காசி: தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் நால்வர் அடங்கிய ஒரு குடும்பம் 165 இடங்களில் கைவரிசையைக் காட்டி கிலோ கணக்கில் நகைகளைத் திருடி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தென்காசி பகுதியில் 2016 முதல் 70க்கும் மேற்பட்ட நகை திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலிசார் குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சிகளை எடுத்து வந்தார்கள். ஆனால் தடயம் எதுவும் சிக்காமலேயே இருந்துவந்தது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள புங்கம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன், 35, அவரின் தம்பி சுரேஷ், 32, தந்தை துரை, 60, தாயார் ராஜபொன்னம்மாள், 55, ஆகிய நால்வரையும் போலிசார் கைது செய்தனர்.
இந்தக் குடும்பம் திருட்டுக் குடும்பம் என்றும் தென்காசி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் 165க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து பெண்களிடம் இவர்கள் நகையைத் திருடி இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் இவர்கள் கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள். தென்காசி பகுதியில் 78 இடங்களில் இந்தக் குடும்பத்தினர் திருடிய சுமார் 2.25 கிலோ நகைகளை போலிஸ் மீட்டு உள்ளது.
இந்தக் குடும்பத்தினர் பல வழிகளிலும் திருட்டு வேலைகளைக் காட்டி இருக்கிறார்கள் என்றும் திருட்டு இருசக்கர வாகனங்களில் சென்று திருடிவிட்டு அந்த வாகனங்களைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு விடுவது இவர்களது வழமை என்றும் போலிஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பிடிபட்ட நால்வரையும் போலிஸ் துருவி துருவி விசாரிக்கிறது. அவர்கள் மேலும் பல தகவல்களைக் கக்குவார்கள் என்று தெரிகிறது.