தஞ்சாவூர்: கோவில் கருவறைகளில் பூசை செய்பவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று சிவனடியார்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.
யாக பூசைகள் அனைத்தும் கோவில் வளாகத்துக்குள் தமிழ்மொழியில் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவரும், பதினெண் சித்தர் மடத்தின் தலைவ ருமான பொன்னுசாமி சித்தர் மூங்கில் அடிகளார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடி யார்கள் நேற்று முன்தினம் பெரிய கோவிலுக்கு வந்து குடமுழுக்குப் பணிகளைப் பார்வையிட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னுசாமி சித்தர், தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்தவேண்டும் என்றார்.
“கடந்த 1997ஆம் ஆண்டு தஞ்சை பெருவுடையார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் இறந்தனர். அதன்பிறகு இரு தினங்களில் எந்தவித முறையான பரிகாரமும் செய்யாமல் அவசர கோலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. எனவே பரிகாரப் பூசைகள் செய்யப்பட வேண்டும்,” என்றார் பொன்னுசாமி சித்தர். பெருவுடையார் கோவிலில் சித்தர் நெறிப்படி தமிழில் பூசைகள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.