சென்னை: இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
பொது நலனுக்காக மாணவர்கள் போராடும் போது தடை விதிப்பது சரியல்ல என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
“குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன் எதிரொலியாகவே போராட்டங்கள் நடக்கின்றன.
“இந்நிலையில் போராட்டம் நடத்தும் மாணவர்களின் குரல்களை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் துரோகம்,” என்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.
ஈழத் தமிழர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்று குறிப்பிட்ட அவர், ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது என்றார்.
“கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமை பெற தகுதி உடையவர்கள் தான். எனவே இந்தக் கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவோம்,” என்று தமிழச்சி தங்கபாண்டியன் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.