சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக சிலர் யூகங்களின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதால் கலவரங்கள் வெடித்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
சரியான புரிதல் இல்லாததால் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் மாணவர்களை போராட்டம் நடத்த தூண்டிவிட்டு கலவரம் செய்ய முயற்சிப்பதாகச் சாடினார்.
“பாஜக ஆளும் மாநிலங்கள், அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் போராட்டங்கள் வெடிக்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பாக நடக்கும் ஆட்சியில் கலவரத்தை உருவாக்கி, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்,” என்றார் சரத்குமார்.
மூன்று தலைமுறையாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை வெளியேற்றி விடுவார்கள் என்ற யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடப்பது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், குடியுரிமை பெற்ற இஸ்லாமியர்களை நாட்டை விட்டு கடத்த மாட்டார்கள் என்றும், அப்படி ஒரு சூழ்நிலை வந்ததால் இஸ்லாமியர்களுடன் சேர்ந்து தானும் போராட்டம் நடத்த தயார் என்றும் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சிகள் தேவை இல்லாமல் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். அது நாட்டுக்கும், வருங்கால சமுதாயத்துக்கும் நல்லதல்ல. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,” என்று சரத்குமார் செய்தியாளர்களிடம் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.