சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களின் ஏற்பாட்டில் தடபுடல் அசைவ விருந்து அளிக்கப்படுவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல மாவட்டங்களில் ஆடு, கோழி, மீன் ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து மீன், கோழி, ஆடுகள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. மேலும் அரசியல் கட்சியினர் உள்ளூர் மொத்த வியாபாரிகளிடம் இருந்தும் இவற்றை அதிக அளவில் வாங்குகின்றனர்.
கிராமந்தோறும் உள்ள கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளைக் கொண்டு அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் தனிப்பட்ட வகையில் இந்த விருந்து நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வதால் வாக்காளர்களின் பாடு கொண்டாட்டமாகி உள்ளது.
இத்தகைய விருந்துகளின் காரணமாக தமிழகத்தில் ஆடு, கோழி, மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வேட்பாளர்களின் இந்த மறைமுக பிரசார நடவடிக்கை குறித்து தகவலறிந்த தேர்தல் ஆணையம், தற்போது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் தேர்தல் முடியும் வரை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆடு, கோழிகளின் வரத்து சற்றே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் வாகனச் சோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் காரணமாக கடந்த இரு தினங்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஆடுகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே போல் கறிக் கோழிகளின் வரத்தும் குறைந்து வருவதால் அவற்றின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்வது தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் இது போன்ற அசைவ விருந்தின் மூலம் அவர்களைக் கவர்வது எளிதாக உள்ளது. மேலும் வாக்காளர்களை வேட்பாளர்களும் ஒரே இடத்தில் நேருக்கு நேர் சந்திக்கவும், ஆதரவு திரட்டவும் இவ்விருந்து உதவுகிறது.
“கறிக்கோழி, ஆடுகளின் விலை உயர்ந்தாலும் விருந்தின் தரம் நிச்சயம் குறையாது. வாக்காளர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்துவோம்,” என்று அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.