சென்னை: 2004 சுனாமியில் மாண்ட சுமார் 8,000 மக்களுக்கு நேற்று தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
கடலில் பால் ஊற்றியும் மலர் தூவியும் மௌன ஊர்வலம் நடத்தியும் சிறப்பு வழிபாடுகள் செய்தும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தினர். அந்தப் பேரிடர் சம்பவம் நிகழ்ந்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டாலும் தமிழ்நாட்டின் கடலோர கிராமங்கள் எங்கும் அதன் தாக்கம் இன்னமும் எதிரொலிப்பதாக பலரும் தெரிவித்தனர்.
இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலடி நிலநடுக்கம் காரணமாக கடல்நீர் 30மீட்டர் உயரத்துக்கு மேலே கிளம்பியதால் உலகின் பல பகுதிகளும் அப்போது பாதிக்கப்பட்டன.
இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா, மாலத்தீவு, மியன்மார் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 230,000 பேர் மாண்டனர். இந்தியாவில், 10,000க்கும் அதிகமானோர் இறந்தனர். தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 7,941 பேரின் உயிர்கள் பலியாயின.
நாகப்பட்டினம் கடற்கரையோர பகுதியில் மட்டும் 6,039 பேரை கடல் சுருட்டியது.
தமிழ்நாட்டில் மாண்டவர்களுக்குப் பல இடங்களில் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
தமிழக மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி நினைவஞ்சலி வழிபாடு நடத்தி வருகிறார்கள். சுனாமி நினைவு நாளையொட்டி நேற்று மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
பல இடங்களிலும் மீன் சந்தைகள் மூடப்பட்டு இருந்தன.
2004 சுனாமியை இந்த பூமி மறக்கவே மறக்காது என்று அந்தப் பேரிடரில் தன் உறவினர்களைப் பறிகொடுத்த ஒருவர் தெரிவித்தார்.