புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் 5.62 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியல் தெரிவிக்கிறது.
இதில் 5.40 புள்ளிகளுடன் மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும் 5.10 புள்ளிகளுடன் கர்நாடகம் 3வது இடத்திலும் உள்ளன.
பொருளியல் நிர்வாகத்தைப் பார்க்கையில், 18 பெரிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
அந்தப் பட்டியலில் பொது சுகாதாரத்தில் கேரளம் முதல் இடம் பிடித்துள்ளது. மொத்தத்தில் கேரளம் 8வது இடத்திலும் தெலுங்கானா 11வது இடத்திலும் உள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி, உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. சுகாதாரத்தில் 2வது இடத்தையும் சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும் வேளாண்மையில் 9வது இடத்தையும் வணிகத்தில் 14வது இடத்தையும் சமூக நலனில் 7வது இடத்தையும் தமிழகம் பிடித்து உள்ளது. மொத்தமாகப் பார்க்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.