சென்னை: இந்தியாவில் சில மாநிலங்களில் ஏழைப் பெண்கள் நாட்கூலியை இழக்காமல் இருப்பதற்காக தங்களுடைய கருப்பையை இழக்கிறார்கள் என்றும் அத்தகைய கொடுமையைத் தவிர்க்க அந்தப் பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அரசு ஓய்வுடன் கூடிய ஊதியத்தை வழங்கவேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாரத்வாடா என்ற பகுதியில் ஏராளமான கரும்புத் தோட்டங்களில் பெண்கள், நாட்சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள்.
மாதவிடாய் நாட்களின்போது வேலைக்குப் போகாமல் இருந்தால் அன்று கூலி கிடைக்காது.
இந்தப் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக அத்தகைய பெண்கள் சுமார் 30,000 பேர் தங்கள் கருப்பையை அகற்றிவிட்டனர் என்று அந்த மாநில முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதித் ராவுத் என்பவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அத்தகைய பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கரும்பு வெட்டும் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் கூலி இழப்பைத் தவிர்ப்பதற்காக தங்கள் கருப்பையை இழக்கிறார்கள் என்று வெளியாகி இருக்கும் தகவல் நாடளாவிய அளவில் பெரும் பிரச்சினையைக் கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், இது பற்றி கருத்து கூறிய பாமக நிறுவனர் ராம்தாஸ், இப்படி பெண்கள் கருப்பையை அகற்றிக்கொள்ளும் கொடுமையைத் தடுக்க வேண்டும் என்று நேற்று அறிக்கை ஒன்றில் வலியுறுத்தினார்.
அத்தகைய பெண்களுக்கு அரசு ஓய்வுடன் கூடிய ஊதியம் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.