சென்னை: புத்தாண்டு பிறக்க இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்க சென்னை நகர மக்கள் தயாராகி வருகின்றனர்.
அதேவேளையில் கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ஆடவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சென்னை போலிசார் முடிவெடுத்து உள்ளனர்.
“புத்தாண்டு இரவில் சென்னை நகரம் முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
“புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது ‘ஹேப்பி நியூ இயர்’ என்று பெண்களிடம் கைகொடுத்து கலாட்டா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பெண் போலி சார் மாறுவேடத்தில் வலம் வர உள்ளனர்.
“அத்துமீறும் ஆடவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வரு கின்றன.
“மெரினா கடற்கரையின் கடலோரப் பகுதியில் தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது. எல்லை மீறு பவர்களைத் தடுக்க குதிரைப் படை போலிசார் வலம்வர உள்ளனர்.
“நகரில் 35 போலிஸ் வாகனங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளன. பாதுகாப்புப் பணியில் மொத்தம் 15,000 போலிசார் ஈடுபட உள்ளனர்,” என்று போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
வரும் 31ஆம் தேதி இரவு புத்தாண்டை வரவேற்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
உற்சாக வெள்ளத்தில் குதிக்கும் இளைஞர்கள் பைக்ரேஸ் போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள்.
மதுபோதையில் வரம்பு மீறும் சில இளைஞர்களும் உண்டு; சில இளம்பெண்களும் உண்டு.
புத்தாண்டையொட்டி, குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களைப் பிடிப்பதற்காக சென்னையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் தடுப்புகள் அமைக்கப் படுகின்றன.
நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் மது விருந்துகளில் பங்கேற்போர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது, அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று போலிசார் உத்தரவிட்டுள்ளனர்.