மும்பை: ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு மகப்பேறு மருத்துவம் பார்த்த இந்திய ராணுவத்தின் பெண் ‘கேப்டன்’கள் இருவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
இந்திய ராணுவத்தின் ராணுவ மருத்துவமனையைச் சேர்ந்த பெண் மருத்துவர்களான கேப்டன் லலிதா, கேப்டன் அமன்தீப் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மேற்கு வங்கத்திலிருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்குத் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து மற்றொரு பெட்டியில் இருந்த ராணுவ பெண் அதிகாரிகள் இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரும் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதையும் உறுதி செய்தனர்.
இவர்களது இச்செயலை இந்திய ராணுவத் தலைமையும் பாராட்டி உள்ளது. மேலும், பிறந்த குழந்தை மற்றும் இரு பெண் மருத்துவர்களின் புகைப்படத்தை இந்திய ராணுவம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
எந்த நேரத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் இந்திய ராணுவம் தன் நாட்டு மக்களுக்குத் துணை நிற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.